ஆயிரம் ஐன்ஸ்டீன்கள் வந்தாலும் ஒரு டன் மலைக்குன்றை நம்மால் உருவாக்க முடியாது என்பதே எதார்த்தம். பல்லாயிரம் ஆண்டுகள் இந்தப் பூமியில் நின்று நிலைத்திருக்கும் மலைகளை, சட்டவிரோதமாக உடைத்து இருந்த இடம் தெரியாமல் ஆக்குகிறார்கள் மாபியாக்கள். இந்த அட்டூழியத்துக்கு எதிராகத் தொடர்ந்து தீரத்தோடு போராடி, கடத்தல்காரர்களை அம்பலப்படுத்தினார், திருமயம் அருகில் உள்ள வெங்களூரைச் சேர்ந்த ஜகபர் அலி. ‘என் உயிருக்கு அச்சுறுத்தல்’ என்று அவரே வீடியோ வெளியிட்டும் அவரைக் காக்க எந்தக் கரமும் நீளவில்லை. எந்த சமரசத்துக்கும் பணியாத அந்தப் போராளியை கடந்த ஜனவரி 17-ம் தேதி துள்ளத் துடிக்க வெட்டிக் கொன்றார்கள் கல்குவாரி மாபியாக்கள். தமிழகத்தையே அதிரச் செய்தது அந்தக் கொலை. 15 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பிரச்னைகளுக்காகவும் இயற்கையைச் சூறையாடிய தீய சக்திகளுக்கு எதிராகவும் போராடி, அதற்கு விலையாக தன் இன்னுயிரையே அளித்தார் ஜகபர் அலி. அவரின் நினைவைப் போற்றி நம்பிக்கை விருதளித்து, நீதி வேண்டி நிற்கும் ஜகபர் அலியின் குடும்பத்தாரைக் கரம் பற்றிக்கொள்கிறது ஆனந்த விகடன்.