ஓர் அரசு அதிகாரி மனம் வைத்தால் மக்களின் வாழ்க்கையே மாறும் என்பதற்கு நல்லுதாரணம் இவர். விருதுநகரில் ஆட்சியராக இருந்த காலத்தில், மாற்றத்தை முன்வைத்து அவர் உருவாக்கிய திட்டங்கள் நாட்டுக்கே முன்மாதிரி. நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மட்டுமல்ல ஆட்சியரின் பணி, எதிர்காலத் தலைமுறையை வார்த்தெடுப்பதும்தான் என்று உணர்த்திய வகையிலும் ஜெயசீலன் தனித்துவமானவர். அவர் நடத்திய ‘காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி, மாணவர்களின் கனவுகளுக்குப் பெருவெளிச்சம் பாய்ச்சியது. இந்தத் தொடர் உரையாடல் பள்ளிக்கல்வி முடிக்கும் 95% மாணவர்கள் கல்லூரிக்குச் செல்வதை சாத்தியமாக்கியதோடு, பட்டாசுத் தொழிலாளியின் குழந்தை ஐ.ஐ.டி-க்குள் நுழையவும், லாரி ஓட்டுநரின் பிள்ளைகள் என்.ஐ.டி-க்குப் போகவும் வழிகாட்டியது. எத்துப்பல்லால் உளவியல் தாக்கத்துக்குள்ளாகும் பிள்ளைகளுக்கு சிகிச்சை அளிக்க, இவர் உருவாக்கிய ‘மலரும் புன்னகை’ திட்டம் தேசமெங்கும் பாராட்டப்பட்டது. திருநங்கைகள் தங்கள் குடியிருப்புக்கு ‘அன்பு ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் நகர்' என்று பெயர் சூட்டி அழகு பார்த்தது, Aspirational District என்று மத்திய அரசிடம் 3 கோடி ரூபாய் பரிசு வாங்கியதெல்லாம் இவரின் நல்லாளுமைக்குச் சான்று. அதிகாரத்தையே அன்பின் அடையாளமாக மாற்றிய இந்த இளம் ஆட்சிப்பணி அதிகாரியை நம்பிக்கை இளைஞராகத் தேர்வு செய்வதில் பேருவகை கொள்கிறது ஆனந்த விகடன்.