‘காலையில வெள்ளைச்சேல கட்டிக்கிட்டு வா' என்று சொல்லிவைத்துத் தன் கணவனைக் கொன்ற காவல் கறுப்பாடுகளை ‘கைதியாக வெள்ளுடை தரிக்க வைப்பேன்' என்று சபதம் செய்து நிகழ்த்திக் காட்டிய வைராக்கிய மனுஷி கிருஷ்ணம்மாள். அதற்காக அவர் நடத்திய போராட்டம், கால் நூற்றாண்டுச் சரித்திரம். உப்பளத் தொழிலாளியான வின்சென்ட்டை விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்றவர்கள், கொடுமையாகச் சிதைக்கப்பட்ட வெற்றுடலாக அள்ளித்தந்தார்கள். ‘நீதி கிடைக்காமல் உடலை வாங்கமாட்டேன்' என்று அன்று தொடங்கிய போராட்டம், குற்றவாளிகள் சிறைக்குச் செல்லும் நாள் வரை நிற்கவேயில்லை. உதவி ஆய்வாளர்கள் தொடங்கி கடைநிலைக் காவலர்கள் வரை 11 பேரைக் கூண்டிலேற்றிய நீதிமன்றம், 9 பேருக்கு ஆயுள் தண்டனை தந்து தர்மம் காத்தது. இடைப்பட்ட காலங்களில் கொலை மிரட்டல், கல்வீச்சு, வேலை பறிப்பு, பண பேரம் என என்னென்னவோ செய்தார்கள் குற்றவாளிகள். எதற்கும் பணியாமல் உறுதியாக நின்றார் இந்த இரும்பு மனுஷி. அதிகார மமதையின் கழுத்தைப் பிடித்து உலுக்கி இந்த எளிய மனுஷி பெற்றது அவருக்கான நீதி மட்டுமல்ல, தொடரும் சிறை மரணங்களுக்கு எதிராகக் காவல்துறையின் செவுளில் விழுந்த சவுக்கடியும்கூட! இந்தப் போராளியை நம்பிக்கை மனுஷியாகத் தேர்வு செய்வதில் பெருமிதப்படுகிறது ஆனந்த விகடன்.