தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்தக் கனவுத்திட்டம், வகுப்பறை, பாடப்புத்தகங்களைத் தாண்டி மாணவர்களுக்குப் போட்டுத் தந்திருப்பது பெரும் ராஜபாட்டை. ஐந்நூறுக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிப் பிள்ளைகளுக்கு இதுவரை வசப்படாமல் இருந்த ஐ.ஐ.டி, என்.ஐ.டி, நிப்ட், எய்ம்ஸ் என இந்தியாவின் பெயர் சொல்லும் கல்வி நிறுவனங்களுக்குக் கொண்டுசென்றது இந்தத் திட்டத்தின் அசாத்திய வெற்றி. இதைச் சாத்தியமாக்கியதற்காகவே இந்தத் திட்டத்துக்குத் தரலாம் நூற்றுக்கு நூறு. கல்லூரி முடிக்கும் தமிழகப் பட்டதாரிகளை வேலைவாய்ப்புகளுக்கு ஏற்றவிதத்தில் தயார்படுத்த, கல்லூரிகள்தோறும் திறன் பயிற்சிகளைக் கட்டாயப் பாடமாக்கியது ஆகச்சிறந்த முன்னெடுப்பு. ஆட்சிப்பணித் தேர்வில் தமிழக மாணவர்களின் பங்களிப்பை உயர்த்த இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதியுதவியும் பயிற்சியும் உயிர்நீராகியுள்ளது. கண்முன் நிகழ்வாக ஒரே ஆண்டில் தேர்ச்சி சதவிகிதம் உயர்ந்திருப்பது நமக்கான நற்செய்தி. பெற்றோரையும் கரம் பற்றி கல்விக்குள் கொண்டுவந்ததன் விளைவு, உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இன்னும் ஒரு படி முன்னகர்ந்திருக்கிறது தமிழகம். விண்ணப்பம் தொடங்கி வேலை பெற்றுத்தருவது வரை பிள்ளைகளின் கல்விப் பொறுப்பைத் தனதாக்கிக்கொண்ட இந்தத் திட்டம், இந்தியாவுக்கே நற்பாதை காட்டும். தந்தையின் கனவைத் தனதாக்கிக்கொண்டு இந்தத் திட்டத்தை வழிநடத்தும் துணை முதல்வர் உதயநிதியின் அக்கறைக்கு அள்ளித்தரலாம் ஆயிரம் லைக்ஸ். உதயச்சந்திரன், முருகானந்தம் ஆகிய அனுபவமிக்க ஆட்சிப்பணியாளர்களின் பங்களிப்பில் இரண்டாண்டுகளுக்கு முன்பு உருக்கொண்ட இந்தத் திட்டம், இன்று லட்சக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்துக்கு வளம் சேர்த்திருக்கிறது. பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வியெனப் பல துறைகளோடு கைகோத்து இத்திட்டத்தைப் பெருங்கனவோடு கொண்டு சேர்க்கும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறைச் செயலர் தாரேஷ் அகமது, திறன் மேம்பாட்டுக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, களத்தில் நிற்கும் அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் அள்ளிக்கொடுக்கலாம் ஆயிரமாயிரம் பூங்கொத்துகள்!