• Title Sponsor

டாப் 10 இளைஞர்கள்

  • ராஜேஸ்வரி

கல்வராயன் மலையின் ஒரு குக்கிராமத்திலிருந்து வந்து ஐ.ஐ.டி மெட்ராஸ் என்ற பெரும் கதவைத் திறந்து உள்ளே நுழைந்திருக்கிறார் இந்த ஆதி நிலப் பெண். பழங்குடிகளுக்கு அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே சிரமமான நிலையில், விடாப்பிடியாகக் கல்வி ஏணியைப் பற்றிக்கொண்டு ஏறி வந்திருக்கும் ராஜேஸ்வரிக்கு எளிதாக வாய்த்துவிடவில்லை எதுவும். புற்றுநோய்க்கு பலியான அப்பா, தனித்து நின்று நான்கு பிள்ளைகளின் பசியாற்றப் போராடிய அம்மா என அத்தனை இடர்களிலும் நம்பிக்கையை மட்டும் விடவேயில்லை ராஜேஸ்வரி. கருமந்துறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் படித்தவரிடம் ஐ.ஐ.டி தேர்வு பற்றி ஆசிரியர்கள் சொல்ல, அயராமல் அதற்குத் தயாரானார். தமிழக அரசு நடத்திய பயிற்சியில் பங்கேற்று அவர் போட்ட உழைப்புக்கும் தொலைத்த உறக்கத்துக்கும் கிடைத்த பரிசு, ஐ.ஐ.டி மெட்ராஸில் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிப்பு. தமிழ்நாடு அரசு பழங்குடியினர் பள்ளியிலிருந்து ஐ.ஐ.டி-க்குள் நுழைந்திருக்கும் முதல் பெண் என்ற பெருமையும் கிரீடமாகிறது. ஒரு பழங்குடி சமூகத்திலிருந்து இந்த உயரத்தை எட்டிப் பிடித்ததற்காகவே இவருக்குத் தரலாம் நூற்றுக்கு நூறு. மனது வைத்தால் ஏழ்மையோ சூழலோ எதுவும் தடையில்லை என்று நிரூபித்து விண்ணை ஆளப்போகும் அன்புத் தங்கைக்கு நம்பிக்கை விருதளித்துப் பெருமிதப்படுகிறது ஆனந்த விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here