உலகின் எல்லா உயிர்களையும் நேசமான ஒரு சங்கிலித் தொடர்பு இழையாக இணைக்கிறது. எல்லா சுயநலங்களையும் தாண்டி அந்தத் தொடர்பு அறுந்துவிடாமல் என்றென்றும் காத்து நிற்கிற மனிதர்கள் சிலர். அப்படியொருவர், இராமநாதபுரத்தின் அமீர் அம்சா. ஆதரவற்றோர் உடல்களை குப்பையோடு குப்பையாக அள்ளிச்செல்லும் ஒரு அவலக்காட்சியைக் கண்டு வேதனைப்பட்டதில் இருந்து தொடங்கியது இந்த 50 வயது டூவீலர் மெக்கானிக்கின் நற்பணி. கடந்த 28 ஆண்டுகளில் துளியும் சோர்வில்லாமல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் உடல்களைப் பெற்று அவரவர் மத வழக்கப்படி நல்லடக்கம் செய்துள்ளார் இந்த மாமனிதர். விபத்துகளில் சிதைந்து இறப்பவர்கள், நீர்நிலைகளில் மூழ்கி இறப்பவர்களென எந்த நிலையில் உடல் இருந்தாலும், பரிவோடு நின்று இறுதிச் சடங்குகள் செய்கிறார். இந்த சேவைக்கு நெகிழ்ந்து தோள் கொடுக்கிறது அவரது குடும்பம். இதற்கென எவரிடமிருந்தும் ஒற்றைப்பைசா பெறுவதில்லை அமீர். மேற்கொண்டு, சாலைகளில் திசையற்றுச் சுற்றித் திரியும் மனநலம் குன்றியவர்களையும் மீட்டு, காப்பகங்களில் சேர்க்கிறார். தானுண்டு தன் குடும்பமுண்டு என மனிதர்கள் சுருங்கிவிட்ட உலகில் ஓர் அபூர்வமாக இருக்கும் அமீர் அம்சாவுக்கு நம்பிக்கை விருதளித்துப் போற்றுகிறது விகடன்.