கடலைத் தூய்மையாக்கி, பிற உயிர்களும் இனப்பெருக்கம் செய்ய இடம் அமைத்துத் தருகிற அற்புத சேவகர்கள் ஆமைகள்தான். இந்த எளிய உயிரினத்தை குற்ற உணர்வே இல்லாமல் கொன்று குவிக்கிறார்கள். அழியும் நிலையில் இருக்கும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளைக் காப்பதற்காக தாய்மையோடு தன்னை அர்ப்பணித்தவர் சுப்ரஜா. தமிழகம், ஆந்திரா, ஒடிசாவென கிழக்குக் கடற்கரை முழுவதும் 700 கிலோ மீட்டரில் ஆமைகளையும் ஆமை முட்டையிடும் நிலக்கூடுகளையும் பாதுகாக்கிறார். 25 ஆண்டுகளுக்கு முன் சுப்ரஜா ஆரம்பித்த ‘ட்ரீ பவுண்டேஷன்’ இதுவரை 44 லட்சம் கடல் ஆமைக் குஞ்சுகளைப் பாதுகாத்துக் கடலுக்குள் அனுப்பியிருக்கிறது. மகப்பேற்றுக்குத் தாய்வீடு வரும் மகளைப்போல, தாம் பிறந்த இடத்துக்கே வரும் ஆமைகளின் முட்டைகளைக் காக்க 142 காப்பகங்களை உருவாக்கியிருக்கிறார். மீனவ கிராமங்களிலிருந்தே இளைஞர்களைத் தேர்வு செய்து கடல் ஆமைப் பாதுகாவலர்களாக மாற்றியது, பள்ளி கல்லூரிகளுக்கெல்லாம் பயணித்து ஆமைகளின் தேவைகளைப் பேசுவது என சுப்ரஜாவின் பணிகள் இடைவிடாது விரிகின்றன. அறுபது வயதிலும் இடைவிடாது இயங்கிக்கொண்டிக்கிற இந்த ஆமை உயிர்காக்கும் அன்னை, எல்லோருக்குமான நம்பிக்கை மனிதர்!