மாறாத் தழும்புகளைத் தந்து வாழ்க்கையை முடக்கிப்போட்ட விபத்திலிருந்து மீண்டெழுந்த பீனிக்ஸ் பறவை மாயா. ஆறு வயதில் பட்டாசு கொளுத்தும்போது பட்ட தீ, இரக்கமே இல்லாமல் உடலைச் சிதைக்க, தடுமாறிப்போனது மாயாவின் வாழ்க்கை. மற்றவர் பார்வைக்கு பயந்து முழுக்கைச் சட்டைக்குள் தன்னை முடக்கிக்கொண்ட மாயா, ஒரு கட்டத்தில் அதுவே தன் அடையாளம் என வீறு கொண்டு எழுந்தது அழகான திருப்பம். விளையாட்டாக அப்பாவின் கியர் பைக்கை ஓட்டிப் பழகியவர், இன்று எல்லாப் பெண்களையும் பைக்கில் பறக்க வைக்கிறார். கல்லூரி மாணவிகள் தொடங்கி இல்லத்தரசிகள் வரை இவரது ‘நோமேட் பைக்கர்ஸ் கிளப்’பில் பைக் பழகி சாலையை விருப்பமான ராஜபாட்டையாக்கியிருக்கிறார்கள். தமிழகம் தாண்டியும் கேரளா, மகாராஷ்டிரா, கோவா என 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் இவரது பயிற்சிக்களம் விரிகிறது. பைக் மெக்கானிக்ஸ் கேம்ப், குரூப் ரைடிங் என பெண்கள் பைக் பழகுவதை ஒரு கொண்டாட்ட அனுபவமாக மாற்றுவதிலும் மாயா தனித்து நிற்கிறார். அன்றைக்கு உடல் காயம் கண்டு அஞ்சி நடுங்கிய பெண், இன்று ஆயிரக்கணக்கான பெண்களுக்குச் சிறகு பூட்டிப் பறக்க வைக்கிறார். விபத்து, இழப்பு, தடை என வாழ்க்கை இடறினாலும் விடாது எழுந்து நிற்கிற இந்த ராஜாளிப் பறவைக்கு நம்பிக்கை விருதளித்துக் கனிவுடன் கரம் பற்றுகிறது ஆனந்த விகடன்.