சட்டம், நீதி, விசாரணை கடந்து, கல்வி தந்த விழிப்புணர்வையும் தாண்டி, இன்றும் குடும்ப வன்முறை நம் பெண்களைத் துரத்திக்கொண்டேதான் இருக்கிறது. இப்படி பாதிக்கப்படும் பெண்களுக்காக 23 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இன்று குழந்தைகள், பெண்கள், திருநர், பால் புதுமையர் என யாவருக்கும் அன்பும் ஆதரவும் பாதுகாப்பும் தந்து அரவணைக்கிறது. அவர்கள் பொருளாதாரத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவும், பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காக்கவும்கூட கரம் கொடுக்கிறது. இந்த அமைப்பின் இன்னொரு பிரிவான ‘விடியல்', குடும்ப வன்முறையால் தீ விபத்துக்கும் அமில வீச்சுக்கும் உள்ளாகும் பெண்களை மீட்டு சிகிச்சையளிக்கிறது. அவர்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பக்கபலமாக நிற்கிறது. அபயம் தேடித் தவித்த ஆயிரக்கணக்கான உயிர்களை அரவணைத்து வாழ்க்கையை ஒளிரச் செய்யும் இந்த அமைப்பின் நிறுவனர் முனைவர் பிரசன்னா கெட்டுவும், ஓயாது உழைக்கும் களப் பணியாளர்களும், கைவிடப்பட்டோருக்கான நம்பிக்கைக் கரங்கள்!