உயிர்மூச்சின் அழகிய ஒலி வடிவமே நாகஸ்வர இசை. தமிழர் வாழ்வின் எல்லா சுபநிகழ்வுகளிலும் இருக்கும் இந்த இசைக்கருவியைக் கையில் எடுத்தபோது மெகபூப் சுபானிக்கு 6 வயது. அவர் அக்கா மகளான காலிஷாவுக்கு 5 வயது. ஒன்பது தலைமுறையை நாகஸ்வர இசைக்கலைக்கு ஒப்புக்கொடுத்த ஒரு மரபுக் குடும்பத்திலிருந்து உதித்த இந்த இசை இணையர், 47 ஆண்டுகளாக நாகஸ்வர தமிழிசைத்து உலகத்தையே மயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுக்க முக்கியக் கோயில்களில் இவர்கள் வாசித்த மல்லாரி இன்னும் காற்றில் உலவிக்கொண்டிருக்கிறது. வறுமை வாட்டிய சூழலிலிருந்து நாகஸ்வரத்தைப் பற்றிக்கொண்டு எழுந்து வந்த இந்த மரபிசைக் காவலர்கள், தமிழகத்தின் இசைமுகமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறார்கள். மதங்களைக் கடந்தது இசையென இறுக்கமுடைத்து நிறுவிய துணிவு மனதுக்காகவே கொண்டாடலாம் காலிஷாவை. ஜனாதிபதி மாளிகைக்குள்ளும் நாகஸ்வரம் இசைத்து தேசத்தை நெகிழவைத்த இந்தத் தமிழகத்தின் பெருமித தம்பதிக்கு நம்பிக்கை மனிதர்கள் மகுடம் சூட்டி மகிழ்கிறது ஆனந்த விகடன்.