அதிகார அத்துமீறல்களை, முறைகேடுகளை, கேள்விக்கு உள்ளாக்கி அம்பலப்படுத்தும் சமரசமற்ற சட்டப் போராளி. தகவல் உரிமைச் சட்டத்தை ஆயுதமாகக் கொண்டு கடந்த 25 ஆண்டுகளில் காவல்துறை தொடங்கி உள்ளாட்சி வரைக்கும் இவர் வெளிக்கொணர்ந்த ஊழல்கள் ஏராளம், ஏராளம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.ஐ மனுக்களைப் போட்டு அரசுத்துறைகளை அதிர வைத்தவர். மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சத்தமில்லாமல் வீதிக்கு வீதி முளைத்த மது விற்பனை மையங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து கேள்விக்குள்ளாக்கியவர். பி.எம் கேர்ஸ், தேர்தல் பத்திரங்களில் குவிந்துள்ள நிதி பற்றி இந்தக் கோவைக்காரர் பற்றவைத்த நெருப்பு தேசம் முழுவதும் இன்றுவரை எரிகிறது. தமிழகத்தின் இரண்டு கவர்னர்களின் நிதி முறைகேடுகளை வெளிக்கொணர்ந்து வழக்குப் பதிவு செய்யும் வரைக்கும் விடாமல் போராடிய இவரின் நெஞ்சுரத்தை வியந்து பார்த்தது தேசம். இவர் போட்ட வழக்கில்தான், ஓட்டுக்குப் பணம் கொடுத்த ஒரு அரசியல்வாதியின் வாக்களிக்கும் உரிமையை ஆறு ஆண்டுகளுக்குப் பறித்தது நீதிமன்றம். ஊழல் இல்லாத, வெளிப்படை நிர்வாகத்தை உருவாக்கத் தனி மனிதராகக் களமாடிவரும் இந்த மகத்தான மனிதரை வணங்கி வரவேற்கிறது ஆனந்த விகடன்!