யாரை வேண்டுமானாலும் நேசித்துவிடுகிற, யாரையும் நேசிக்க வைத்துவிடுகிற கதாபாத்திரங்களை உலவவிட்டு மெய்யழகனாக்கிய இயக்குநர் பிரேம்குமாருக்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்தது, சிவப்புக் கம்பள வரவேற்பு. ஒளிப்பதிவாளராக ‘பசங்க’, ‘சுந்தர பாண்டியன்’ எனத் தொடங்கியவருக்கு காதல் பெருவெளியில் ‘96’ தந்தது, பெரும் திருப்புமுனை. கத்தியும் ரத்தமும் சல்லடையாகத் துளைக்கும் குண்டுகளும் தவிர்த்து, வழக்கமான தமிழ் சினிமா பார்முலாவைத் தலைகீழாக்கிய அபார திரைக்கதைகளை அடுத்தடுத்து அடுக்கியதில் இது ஒரு புதுப்பாய்ச்சல். ஆக்ஷனில் அடித்து விளையாடிய நடிகர்களைக் கலைஞர்களாக்கி இவர் அழைத்துச் சென்ற அழகிய வண்டிப்பாதையில் தமிழுலகம் மொத்தமும் நிதானமாகப் பயணித்து இளைப்பாறியது.‘அன்பைவிட மேலானது எதுவும் இல்லை’ எனச் சொல்லிய வகையிலும் நம் முகத்தை நமக்கே காட்டும் கண்ணாடியாக இருந்தார். ஒவ்வொருவரின் விழியோரத்திலும் துளிக்கண்ணீரையாவது திரள வைத்து பேரன்பு போதித்த இந்த அற்புதக் கலைஞனின் அடுத்தடுத்த படைப்புகளுக்காகக் காத்திருக்கிறது தமிழ் சினிமா.