நவீனத் தமிழ்ச் சமூக வரலாற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை, பல்வேறு கோணங்களில் தொடர்ந்து பதிவு செய்துவரும் வரலாற்று ஆய்வாளர். தேடல், ஆய்வு, எழுத்து, பதிப்பு, மொழிபெயர்ப்பு என வரலாறு மற்றும் தமிழ் இலக்கிய வெளியில் இவர் பங்களிப்பு போற்றத்தக்கது. வரலாற்றை, புனைவெழுத்துக்கு உரிய சுவாரஸ்யத்துடனும் படைப்பூக்கம் மிக்க மொழியாலும் விரித்துச் செல்பவர். வ.உ.சி, பாரதி, புதுமைப்பித்தன் உள்ளிட்ட பல ஆளுமைகளுக்கு இவர் ஆய்வின் மூலம் தந்தது, முற்றிலும் தெளிவான புதிய முகம். பழந்தமிழ் நூல்கள், வரலாற்று அசைவுகள், அரசியல் பெரு நிகழ்வுகள், பண்பாட்டு மாற்றங்கள் என இவர் பாய்ச்சிய வெளிச்சம், வரலாற்றை மீள்வாசிப்புக்கு உட்படுத்தியது. சிகாகோ உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர், இப்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர். ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி-யும் 1908’ என்ற நூலுக்காக சமீபத்தில் கைவந்தது சாகித்திய அகாடமி விருது. ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ எனும் சுடரேந்தி, ஆய்வுலகில் அழுத்தமாய்க் கால்பதித்து நடக்கும் சலபதி, கடல் கடந்தும் போய் காலத்தடயம் தேடும் ஆய்வுப்பறவை.