புதுமுக இயக்குநர்கள், வித்தியாசக் கதைக்களங்கள், அபூர்வமான கதாபாத்திரங்கள் என தேடித்தேடி நடிக்கும் ஹரிஷ் கல்யாண் இந்த ஆண்டின் வித்தியாச நாயகன். தானே முன்னிருக்க வேண்டும் என்று முனைப்புக் காட்டாமல் பிற கலைஞர்களோடு சரிசமமாகப் பங்களித்து சினிமாவுக்கான நியாயம் செய்வதில் தெரிகிறது, ஹரிஷ் கல்யாணின் புரிந்துணர்வும் பெருந்தன்மையும். சிட்டி சப்ஜெக்ட் என்ற ஹோம் கிரௌண்டில் பல விக்கெட்களை வீழ்த்திவிட்டு, வில்லேஜ் சப்ஜெக்டான ‘லப்பர் பந்து' படத்திலும் ‘அன்பு'வாக ஸ்டெம்புகளைத் தெறிக்கவிட்டது அழகு. ‘பார்க்கிங்' படத்தில் காரை எங்கே நிறுத்துவது என்பதுதான் கதை. ஆனால் அந்தப் படத்திலிருந்து ஹரிஷின் கிராப் டாப் கியரில் பறந்துகொண்டிருக்கிறது. ‘பியார் பிரேமா காதல்', ‘ஓ மணப்பெண்ணே!' என எல்லா ஏரியாக்களிலும் இஸ்பேட் ராஜாவாக அவர் வெளிப்படுத்தியது உணர்வுகளின் வானவில். கடந்த ஆண்டுகளில் எக்கச்சக்கமாக நடித்துக் குவிக்காமல் எப்பொழுதும் நல்ல நல்ல படைப்புகளைத் தேடிப்பிடித்து நடிக்கிற ஹரிஷ் கல்யாண், தமிழ் சினிமாவின் இனிய நம்பிக்கை நட்சத்திரம்!