கமலினிக்கு இது புத்துணர்ச்சி வருடம்! தொழில்முறை கிரிக்கெட் இன்னும் சாமானிய மக்களுக்குக் கனவுதான். அதிலும் பெண்களுக்கு சவால்கள் அநேகம். சமூகத்தில் பிற்போக்குச் சங்கிலிகள் கட்டியிழுக்க, அவற்றைச் சுலபமாகக் கடந்துவிட்டார் கமலினி. மதுரையைச் சேர்ந்த பதினாறே வயதான இந்தப் பெண்ணை சமீபத்தில் நடந்த விமன்ஸ் பிரீமியர் லீக் ஏலத்தில் வாங்குவதற்கு அணிகள் போட்டி போட்டது அவரது திறமைக்குச் சாட்சி. ரூ.1.6 கோடி அள்ளிக்கொடுத்து இந்த மதுரைத் தங்கத்தை அள்ளிக்கொண்டது மும்பை அணி. தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழக அணியில் கமலினி தான் ஸ்டார் ஆட்டக்காரர். பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியில் ஆட்டநாயகி விருதை அள்ளி ஆச்சர்யப்படுத்தினார். மட்டையைப் பிடித்த ஆரம்ப ஆண்டுகளிலேயே கமலினி கொடுத்த நுணுக்கமான ஆட்டம், கிரிக்கெட் ஜாம்பவான்களைப் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. ஸ்மிருதி மந்தனா, ஹர்மன் ப்ரீத் என இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார்களுடன் கமலினி கைகோக்கும் காலம் இதோ அருகிலேயே வந்துவிட்டது. எல்லா ஜீனியஸ் ஆட்டக்காரர்களாலும் புகழப்படும் கமலினியின் முன்னால் உடைபடக் காத்திருக்கின்றன இன்னும் பல சாதனைகள். நிகழ்த்திக் காட்டுங்கள் கமலினி!