சென்னைக்குள் குடிசைகளை அகற்றும்போதெல்லாம் அந்த மக்களைக் குடியேற்றும் கண்ணகி நகருக்கு இந்த இளைஞர் கூட்டம் தந்திருப்பது தனித்த அடையாளம். துளி பிசகினாலும் தடம் மாறிவிடும் ஆபத்துகொண்ட ஒரு குடியேற்றப் பகுதியில் இவர்கள் நிகழ்த்தியிருக்கும் இந்த மாற்றம், சொல் அல்ல செயல். மாரிச்சாமி என்ற இளைஞரின் கனவில் துளிர்த்த விதை இது. பள்ளியில் இடைநிற்கும் பிள்ளைகளுக்குச் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி வாங்கப்போன மாரிச்சாமியின் நோக்கமுணர்ந்து கைகொடுத்தார் ஓய்வுபெற்ற தலைமைச் செயலர் இறையன்பு. 272 இளைஞர்களைப் பட்டதாரிகளாக்கியிருக்கிறது இந்த மையம். இன்று அவர்களே இந்த மையத்தை வழிநடத்துகிறார்கள். குழந்தைகளை நேர்ப்படுத்த சிறப்பு வகுப்புகள், கம்ப்யூட்டர் பயிற்சி, இசை, நடனம், சிலம்பம், கராத்தே எனப் பல்கலைக் கலைக்கூடமாக இயங்குகிறது, முதல் தலைமுறைக் கற்றல் மையம். அத்தனை பயிற்சியாளர்களும் ஒற்றைப்பைசா பெறாமல் சமூகக்கடமையாக இங்கே வந்து பயிற்றுவிக்கிறார்கள். திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ஆதரவோடு இங்கு வழங்கப்படும் தொழிற்பயிற்சிகள் குடும்ப வன்முறையால், வேலையின்மையால் தவிக்கும் பெண்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. இந்தப் பிள்ளைகளின் நோக்கமுணர்ந்து அரசும் தொண்டு நிறுவனங்களும் கைகொடுக்கிறார்கள். கல்வி, வாழ்க்கையை மட்டுமல்ல, தலைமுறையையே மாற்றும் என்ற நம்பிக்கையோடு இந்த முதல் தலைமுறைப் பட்டதாரிகளைப் பாராட்டி வாழ்த்துகிறது ஆனந்த விகடன்.