தமிழிசை ரொம்பவும் மாறிவிட்டது. அதன் தற்போதைய சென்சேஷன், சாய் அபயங்கர் என்று அழைக்கப்படுகிற மிக இளைஞன். இந்த ஆண்டு ‘கட்சி சேர', ‘ஆச கூட' என இரண்டே இரண்டு துள்ளலான பாடல்கள் தந்து தமிழ் இளைஞர்களைப் இழுத்திருக்கிறார். ஸ்பாட்டிபை, யூடியூப் என எல்லாத் தளங்களிலும், தம்பிதான் இப்போது ஹாட் ஸ்டார். தனியிசைப் பாடல்கள் கொண்டாடப்படும் இன்றைய இசை யுகத்தின் டிரெண்ட் அறிந்த இசைஞன். அதனாலேயே இந்தத் தலைமுறைக்குத் தேவைப்படும் புத்திசையின் சூட்சுமத்தை இளம் பருவத்திலேயே பிடித்து வந்து அசத்தியிருக்கிறார் இந்த GEN Z கிட். தமிழகத்தின் புத்தியல்பு இளைஞர்களை வசப்படுத்தி மயக்கிவிட்ட சாய்தான் நடிகர்கள் சூர்யா, லாரன்ஸின் அடுத்தடுத்த படங்களுக்கு மியூசிக் டைரக்டர். அதற்குள் ‘அடுத்த பாடல் ஒன்று தாங்களேன்' என ரசிகர்கள் ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கிறார்கள். பாடகர்கள் திப்பு-ஹரிணியின் செல்வமகனான இந்த சாய், எதிர்காலத்தின் இசை முகமாக இருப்பார்!