உழைப்புக்கும் போராட்ட குணத்துக்கும் அப்பழுக்கற்ற உதாரணம் இந்த சிந்து கணபதி. இழப்பு, தடை, விபத்து என வாழ்க்கை இடறினாலும், விடாது எழுந்து நடக்கிற இந்தத் தமிழ்ப் பட்டதாரியின் வாழ்க்கை நமக்கான தன்னம்பிக்கைப் பாடம். பாலினக் குழப்பத்தால் பால்யம் முழுக்க கேலி, கிண்டலோடு கழிய, 18 வயதில் நிகழ்ந்த தந்தையின் மரணம் பெருந்துயரில் தள்ளியது சிந்துவை. வாரிசு அடிப்படையில் திருவனந்தபுரம் ரயில்வேயில் கலாசி வேலை கிடைத்தது. அவமானங்கள் விடாது துரத்த, 23 வயதில் வீட்டையும் வேலையையும் உதறிவிட்டு தன் சமூகம் நாடிச் சென்றார். 18 மாதங்களுக்குப் பிறகு திருநங்கை அடையாளத்தோடு திரும்பிவந்து ரயில்வே நிர்வாகத்திடம் வேலை கேட்டார். தயங்கிய ரயில்வே நிர்வாகத்துக்குத் தொழிற்சங்கங்கள் அழுத்தம் தர, எலெக்ட்ரிக்கல் டெக்னீஷியனாக இணைத்துக்கொண்டது. அத்துடன் நின்றுவிடாமல் அடுத்தடுத்து தேர்வுகள் எழுதி நிலையுயர்ந்த நேரத்தில் அடுத்த இடியாக நிகழ்ந்தது ஒரு பெரும் விபத்து. அதிலிருந்தும் மீண்ட சிந்து இன்று டிக்கெட் பரிசோதகராகி மொத்த சமூகத்துக்கும் முன்னுதாரணமாகியிருக்கிறார். எவருக்கும் கல்வி என்பது நம்பிக்கை, சுதந்திரம், மாற்றத்தை ஏற்படுத்தும் மகத்தான சக்தி என உணர்த்திய சிந்து கணபதியைக் கொண்டாடுகிறது ஆனந்த விகடன்.