தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய ஒலி முகங்கள். கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமா, தொழில்நுட்பத்தில் எட்டியிருக்கும் உயரம் அசாத்தியமானது. அதற்காக அக்கறையோடு உழைக்கும் கலைஞர்களில் இந்த ஒலி ஆளுமைகள் இருவரும் முக்கியமானவர்கள். புதிய சிந்தனையோடு திரைத்துறைக்கு வரும் படைப்பாளிகள் இவர்களையே தேடுகிறார்கள். கதையை உள்வாங்கி, களத்துக்கே சென்று அசலான ஒலியைத் தேடியெடுத்து வந்து மக்களுக்கு நெருக்கமாக மாற்றுவதிலும் இவர்கள் தேர்ந்தவர்கள். சுரேன்-அழகியகூத்தன் கூட்டணி உருவாக்கும் எதார்த்த ஒலிக்கு ரசனையான ரசிகர்கள் கூடியிருப்பது உண்மை. கமர்ஷியல் சினிமா, லைவ் சவுண்ட் படம் எதுவாக இருந்தாலும் கதையின் தேவையுணர்ந்து அதைக் கொண்டு வந்து சேர்ப்பதில் இந்த இரட்டையர் கெட்டிக்காரர்கள். `கொட்டுக்காளி', `வாழை', `மெய்யழகன்' என கடந்த ஆண்டு நம் மனதைத் தொட்ட படைப்புகளின் உயிர்த்தன்மைக்கு இவர்களின் பங்களிப்பு பெரியது. திரை ஒலியில் புதிய வடிவங்களைக் கட்டமைப்பதில் ரசனை கூட்டுகிற இந்த இருவரும் சாதிக்க இன்னும் இருக்கிறது புதிய வரலாறு!