மருத்துவம் பெருவணிகமாகிப்போன தேசத்தில், நடக்க முடியாத, தனித்து வசிக்கும், ஆதரவற்ற முதியோரைத் தேடித் தேடிச் சென்று சிகிச்சையளிக்கிறார் இந்த மாண்புமிகு மருத்துவர். குறைந்த கட்டணத்திலும் பணமே பெற்றுக்கொள்ளாமலும் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இந்த மதுரைக்காரரின் சேவை இதுவரை 25,000 முதியோருக்கு பலனளித்திருக்கிறது. மதுரையைச் சுற்றிலும் 60 கி.மீ தூரத்துக்கு ஒற்றை அலைபேசி அழைப்புக்குப் போய் நிற்கிறார், எமர்ஜென்ஸி மெடிசினில் முதுநிலை முடித்திருக்கும் இந்த மருத்துவர். கார்ப்பரேட்காரர்களின் கட்டணத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாத எளிய மக்களுக்கு இவர் உருவாக்கியுள்ள ‘டாக்டர் ஆன் வீல்ஸ்' மொபைல் கிளினிக் பெரும் ஆறுதல். கொரோனா காலத்திலும் பம்பரமாக உழைத்ததில் வெளிப்பட்டது இவரது மானுட நேசம். சிகிச்சையோடு முதியோருக்குத் தேவை அவர்கள் உணர்வுகளைக் காது கொடுத்துக் கேட்கும் ஒரு மனது. அடுத்த வீட்டில் பிரச்னை என்றாலே ஜன்னல் சாத்துகிற உலகில், அப்படியொரு கருணை மனம் வாய்த்த சுவாமிநாதன் செய்வது மகத்தான மனிதம், வணங்க வேண்டிய புனிதம்!