• Title Sponsor

டாப் 10 இளைஞர்கள்

  • அபினேஷ்

வியர்வையையே விதையாக்கி, டெல்டா மண்ணிலிருந்து முட்டி மோதி முளைத்து வந்திருக்கிறார் இந்த இளம் ‘பைசன்.' திருவாரூர் மாவட்டம், வடுவூரைச் சேர்ந்த இந்த எளிய வீட்டுப் பிள்ளைக்கு, இந்தியாவுக்காகக் கபடிக் களத்தில் இறங்க வேண்டுமென்பது பெருங்கனவு. அப்பா மறைந்தபோதும் பிள்ளைக்கு எல்லாமுமாக இருந்து அந்தக் கனவுக்கு உயிர் கொடுத்தார் அம்மா தனலட்சுமி. கபடியாடும் கால்களைப் பற்றியிழுத்த வறுமை, அன்றாட வாழ்க்கையைக்கூடப் போராட்டமாக்கியது. ஆனாலும் இந்த நெஞ்சுரம் நிறைந்த இளைஞன் கபடி ஆடுவதிலிருந்து மட்டும் விலகவேயில்லை. புழுதி பறக்கும் களங்களைத் தந்திரமான தற்காப்பு ஆட்டங்களால் தன்வசமாக்கினார். தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அபினேஷின் திறன் கண்டு அரவணைத்து உலக அரங்குகளுக்கு வழிகாட்டியது. பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை வீரர்களில் ஒருவராகக் களமாடி, இந்தியா தங்கப்பதக்கத்தைத் தட்டிவரக் காரணமானார். இந்த ‘தங்க மகன்' இனி படைக்கப் போவதெல்லாம் சாதனைகளும் சரித்திரங்களுமே. ஒரு குக்கிராமத்தின் சின்னஞ்சிறு வீட்டுக்குள்ளிருந்து உதித்த கனவு, இன்று உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் இந்த அன்புத்தம்பிக்கு நம்பிக்கை இளைஞர் விருதளித்துப் பாராட்டுவதில் பேரானந்தம் கொள்கிறது ஆனந்த விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here