ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் அலமேலு, குடியரசுத் தலைவரிடம் ‘ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்' விருது பெற்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டுக்குக் கிடைத்த கௌரவம் இது. வாழ்வாதாரமாக இருந்த நிலத்தை விற்று நர்ஸிங் படித்தவர், 2008-ல், திருவண்ணாமலை மாவட்டத்தில் செவிலியராக அரசுப் பணியில் நுழைந்தார். மக்களுக்கு நெருக்கமாகி, வீடுகளிலேயே நடந்த பிரசவங்களை மருத்துவமனைக்கு மாற்றியதில் இவர் உழைப்பு கணிசமானது. மரபு நம்பிக்கைகளில் திளைத்து, நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பந்தலூர் பழங்குடிகளோடு தங்கி, கருத்தடை விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அவர் செய்தது அரும்பணி. ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சமூகப் பங்களிப்போடு பிரசவ அறைகளை மேம்படுத்தியது, தேசிய சுகாதார இயக்கத்தின் ‘லக்சயா' அங்கீகாரம் பெற்றது, மத்திய அரசின் காயகல்ப விருதை வென்றது என எல்லா முன்னேற்றங்களிலும் அலமேலுவின் பங்கு அதிகம். எளிய மக்களின் நலனுக்குத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட இந்தத் தமிழகத்து ‘கைவிளக்கு ஏந்திய காரிகை'யை நம்பிக்கை மனிதராகக் கொண்டாடுகிறது ஆனந்த விகடன்.