சாப்ட்வேர் நிறுவனம் தொடங்க, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற பெருநகரங்கள்தான் பொருத்தமென நினைப்பவர்களுக்கு அருண் சொல்லும் செய்தி முக்கியமானது. எண்ணமும் தேடலும் சரியாக இருந்தால் எங்கிருந்தும் நீங்கள் சாதிக்கலாம். சொந்த ஊரான நாகர்கோவிலில் ஏழாண்டுகளுக்கு முன்பு ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் அருண் தொடங்கிய ஃபினோஸ் (FinOS) டெக்னாலஜி நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 100 கோடி ரூபாய் என்பது ஆச்சர்யம். வங்கிக் கணக்குகளை டிஜிட்டலாகப் பராமரிக்கும் இவர்களின் சாப்ட்வேர் நிறுவனம் ஜப்பான், நெதர்லாந்து, கென்யா தொடங்கி 15 நாடுகளில் 75-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சேவை செய்கிறது. சென்னை, துபாய், அமெரிக்காவின் டெலாவர் ஆகிய இடங்களில் விற்பனை அலுவலகங்களையும் உருவாக்கியிருக்கிறார் இந்த 37 வயது இளைஞர். ஒரு சிறு நகரத்தில் விதை ஊன்றி, உலகெங்கும் கிளை விரித்து நிற்கும் ஃபினோஸ் நிறுவனத்தின் பிசினஸ் ஆண்டுக்காண்டு இரண்டு மடங்காக அதிகரிப்பது, பெரு வளர்ச்சிக்கான அறிகுறி. பில்லியன் டாலர் கம்பெனி கனவோடு வெற்றி நடைபோடும் இந்தத் தொழில்நுட்பனுக்கு நம்பிக்கை விருதளித்துக் கரம் குலுக்குகிறது ஆனந்த விகடன்.