• Title Sponsor

டாப் 10 இளைஞர்கள்

  • இசக்கிமுத்து

தமிழக கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கை முகம். விளிம்பு நிலை இளைஞர்கள் பலருக்கும் கிரிக்கெட் என்பது இன்றும் அரிதான பெருங்கனவுதான். புதிது புதிதாக வரும் லீக்குகள், திரண்டு வரும் திறமையாளர்கள் என களம் களைகட்டியிருக்கும் இந்த நேரத்தில், கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் இசக்கிமுத்து நிகழ்த்துவது சரித்திர சன்னதம். திருநெல்வேலி மாவட்டம் களக்குடியில் பிறந்த இந்த 23 வயது இளைஞன் விதைத்திருப்பது பல தலைமுறைகளுக்குமான நம்பிக்கை. ரப்பர் பந்து, டென்னிஸ் பந்துகளில் தொடங்கிய இவரின் கிரிக்கெட் பயணம், தொடர் பயிற்சிகளால் பக்குவப்பட்டு இன்று தமிழக அணி வரைக்கும் அதிவேகத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. தமிழ்நாடு ப்ரீமியர் லீகில் திருப்பூர் அணிக்காக 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது ‘யார் இந்தத் தம்பி' என எல்லோர் பார்வையும் இவரின் பக்கம் திரும்பியது. அடுத்தடுத்து அவர் நிகழ்த்திய சாதனைகள், சையத் முஷ்தாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணியில் அவருக்கான இடத்தை உறுதிசெய்தன. சௌராஷ்டிரா அணிக்கு எதிராக வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டைச் சாய்த்து அரங்கத்தை அதிர வைத்து ஆச்சர்யப்படுத்தினார். படுதுல்லியமான இலக்கு, நிதான வேகம் எனப் பந்துவீச்சில் இவர் வெளிக்காட்டும் தனித்துவம், சீக்கிரமே இந்திய அணிக்கான கதவுகளைத் திறக்கவைக்கும். இந்த நம்பிக்கை நாயகனை ‘சென்று வென்று வா' என ஆரத்தழுவி வாழ்த்துகிறது ஆனந்த விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here