-
இன்னோவேஷன் அவார்ட்
முருகவேல் ஜானகிராமன்,
சேர்மன் & மேனேஜிங் டைரக்டர்,
மேட்ரிமோனி.காம்
வழக்கமாக எல்லோரும் செல்லும் பாதை, ஊர் சேர்க்கலாம். ஆனால் உயர்வுக்கு வழியாகாது. மாற்றி யோசித்தவர்கள் மட்டும்தான் இந்த மண்ணில் மகத்தான சாதனையை நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்கள். இதையும்கூட வர்த்தகம் ஆக்கமுடியுமா, இப்படியும்கூடவணிகம் செய்யமுடியுமா என்று அனைவரையும் ஆச்சர்யப்பட வைப்பவர்களுக்கான விருது இன்னோவேஷன் விருது.
இந்த மகுடத்தைத் தரிக்கப்போகிறவர், ஒரு மங்களகரமான மனிதர். ஆமாம், மேட்ரிமோனி டாட்காம் சேர்மன் & மேனேஜிங் டைரக்டர முருகவேல் ஜானகிராமன்தான் அவர். 'திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது' என்பது நம் அனைவரின் நம்பிக்கை. ஆனால் சொர்க்கத்தை மண்ணிலேயே உருவாக்கலாம், இங்கேயே திருமணங்களை நிச்சயிக்கலாம் என்று சொர்க்கத்துக்கே புது ரூட் போட்டவர் திரு.முருகவேல் ஜானகிராமன்.
சென்னையில் படித்து முடித்த முருகவேள் ஜானகிராமன், அமெரிக்காவில் ஐ.டி துறையில் வேலைக்குப் போனார். அங்கு வேலை பார்த்தபோது, தமிழ் வாசிக்கும் மக்களுக்கென்று தனியாக ஓர் இணையதளத்தை உருவாக்கினார். அதில் இரண்டு பக்கங்கள் மட்டும் இடம்பெறும் வகையில் மேட்ரிமோனி குறித்த விளம்பரங்களை வெளியிட்டார். இந்த விளம்பரங்களைப் பார்க்க அதிகமான பார்வையாளர்கள் வருவதை அறிந்தபோது அவரிடம் பொறி தட்டியது, புதுவழி கிட்டியது.
இரண்டு பக்கங்கள் மட்டுமே இருந்த மேட்ரிமோனி, இணையதளமாக உருவெடுத்தது. பாரத் மேட்ரிமோனி.காம் என்ற புதிய குழந்தை பிறந்தது. ஆமாம், திருமணம் செய்துவைப்பதற்காகப் பிறந்த வினோதக் குழந்தை இது. முருகவேள் ஜானகிராமன் உருவாக்கிய இந்த இன்னோவேஷன், இந்தியத் திருமணங்களில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஜாதி, மதம் என எல்லாப் பிரிவுகளின் அடிப்படையிலும் வாழ்க்கை துணை தேடுபவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கியது. கெட்டிமேளங்கள் கேட்கத் தொடங்கின. நிக்காஹ்கள் நிச்சயமாயின. சர்ச்சில் திருமண சந்தோஷம் களை கட்டியது. சாதி, மதம், மாநிலம், மொழி என எல்லைகள் கடந்து எல்லோருக்குமான இணையதளமாக உருவானது 'பாரத் மேட்ரிமோனி டாட்காம்'.
இதுவரை 40 லட்சம் திருமணங்கள் நடப்பதற்குக் காரணமாக இருந்த இந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு சுமார் ரூ2000 கோடி. நம்பிக்கையான பிராண்ட், ஆன்லைனில் அதிக திருமணங்களை செய்து வைத்த நிறுவனம் என பல பெருமைகளைப் பெற்ற இந்த நிறுவனம், மேட்ரிமோனி உலகின் நம்பர் 1 தளமாக, தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டது.
சமூகத்தின் பலதளங்களில் பெரும் மாற்றம் உருவாகக் காரணமாக இருந்த முருகவேல் ஜானகிராமனுக்கு இன்னோவேஷன் அவார்ட் அளிப்பதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்!