-
பிசினஸ் மென்ட்டார் அவார்ட் (இன்ஸ்ட்டிடியூஷன்)
கொடிசீயா (CODISSIA)
ஒரு நிறுவனம் என்பது தன்னை மட்டும் நிறுவிக்கொள்வது அல்ல, தன்னோடு சேர்த்து பல சக பயணிகளை உருவாக்கி, அதன்மூலம் வெற்றிகரமான வாழ்க்கையையும் உருவாக்கவேண்டும். இதுதான் இலக்கணம் என்றால், அதற்கான எடுத்துக்காட்டு கொடிசீயா. கோயம்புத்தூர் டிஸ்ட்ரிக் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் என்பதன் முதலெழுத்து சுருக்கம்தான் கொடீசீயா.
நூற்றாண்டுகளுக்கு முன்பே கோவை நகரம் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்குத் தயாரான களமாய்க் காத்துக்கிடந்தது. எனினும் இருபதாம் நூற்றாண்டில் முதல் எழுபதாண்டு காலம் வரை கோவை நகரைச் சுற்றியுள்ள சிறு தொழில் நிறுவனங்களை ஒன்றுபடுத்த அமைப்பு எதுவும் இல்லாத நிலையே இருந்தது. சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கென ஒரு அமைப்பு தேவை என உணர்ந்தபோது, அந்த வரலாற்று வாய்ப்பு உருவானது. 1969-ம் ஆண்டு கொடீசியா என்ற அமைப்பு பிறந்தது. 40 உறுப்பினர்களுடன் ஆரம்பமான இந்த அமைப்பு, லாப நோக்கம் இல்லாமல் சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி ஒன்றையே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஜெர்மனியில் இருக்கும் ஹானோவர் நகரத்தைப் போல கோவை நகரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதே கொடீசியாவின் இலக்கு.
கோவையைச் சுற்றி இயங்கிவரும் பல்லாயிரம் சிறு தொழில்முனைவோர்களுக்கு இந்த அமைப்பு தொடர்ந்து வழிகாட்டி ஒளிகூட்டுகிறது. கொடீசியா நிறுவனத்துக்குச் சொந்தமானது கொடீசியா டிரேட் ஃபேர் காம்ப்ளக்ஸ். இங்கு ஆண்டு முழுவதும் நடக்கும் பல்வேறு கண்காட்சிகளும் வர்த்தகத்துக்கான பல்வேறு வாசல்களைத் திறக்கின்றன. வெறும் 40 பேருடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் இன்று பல ஆயிரம் சிறு தொழில் செய்பவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 'சிறுதுளி பெருவெள்ளம்' என்ற பழமொழியை நிஜமாய் நிகழ்த்திக் காட்டிய, கோவையைத் தொழில் பூமியாய் உயர்த்திக்காட்டிய கொடீசியா அமைப்புக்கு பிசினஸ் மென்ட்டார் (இன்ஸ்ட்டிடியூஷன்) அவார்ட் அளிப்பதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்!