-
லைப் டைம் அச்சிவ்மென்ட் அவார்ட்
சுரேஷ் கிருஷ்ணா,
சேர்மன் அண்ட் மேனேஜிங் டைரக்டர்,
சுந்தரம் பாசனர்ஸ லிமிடெட்
திறமை, நேர்மை, வெற்றி என்ற மூன்று வார்த்தைகளுக்கு அடையாளமாக ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட வேண்டும் என்றால், அதையும் மூன்றெழுத்துகளில்தான் குறிப்பிட வேண்டும். டி.வி.எஸ். - இந்த மூன்றெழுத்து பெயரைக் கேள்விப்படாத தமிழர்களே இருக்கமுடியாது. நூற்றாண்டைக் கடந்தும் நிற்கும் தமிழகத்தின் மிகச்சில வெற்றிகரமான நிறுவனங்களில் டி.வி.எஸ் நிறுவனத்துக்கு எப்போதுமே ஒரு தவிர்க்கமுடியாத தங்க நாற்காலி உண்டு. டி.வி.சுந்தரம் அய்யங்கார் அவர்களின் வாரிசுகளும் தங்கள் பாரம்பரியத்தைக் காப்பாற்றும் பட்டை தீட்டும் வைரங்களாகத்தான் விளங்கிவருகிறார்கள். அதில் முதன்மையானவர், முக்கியமானவர் 'சுந்தரம் பேசனர்ஸ்' நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் திரு.சுரேஷ் கிருஷ்ணா.
இவர் படித்தது என்னவோ அறிவியலும் இலக்கியமும். அதுவும் ஜெர்மனில் உள்ள முனீச் பல்கலைக்கழகத்தில் இலக்கியம் குறித்து மேற்படிப்புப் படித்தார். ஆனால் இவர் உதிரத்தில் ஓடிய வியாபார உணர்வு, உருவாக்கியது ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை. 1962-ம் ஆண்டு டி.வி.எஸ். சன்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணா 1966-ல் சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தரப்பட்டது. 'பொறுப்பு' என்ற வார்த்தைக்கு சிறப்பு சேர்க்கும்படி, இவர் ஈட்டிய வெற்றிகளும், சாதித்த சாதனைகளும், சந்தித்த சவால்களும் ஏராளம்!
சென்னைக்கு அருகில் உள்ள அம்பத்தூரில் சிறிய அளவில் நடந்துவந்த சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனத்தை பாடியில் பெரிய தொழிற்சாலையாக மாற்றிக் காட்டினார் சுரேஷ் கிருஷ்ணா. வணிக உலகத்தின் வளர்ச்சிக்கான மைல்கல் இது. ஐ.எஸ்.ஓ. நிறுவனத்தின் தரச் சான்றிதழைப் பெற்ற முதல் இந்திய நிறுவனம் இதுதான். உதிரி பாகங்களைத் தயாரிப்பதில் மிகச் சிறந்த நிறுவனம் என அமெரிக்காவின் ஜெனரல் மோட்டர் நிறுவனத்திடமிருந்து பாராட்டினைப் பெற்ற ஒரே இந்திய நிறுவனம், தொழிலைசாலைகளைப் பராமரிப்பதில் மிகச் சிறந்த நிறுவனம் என ஜப்பான் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ப்ளான்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்திடமிருந்து டி.பி.எம். சான்றிதழைப் பெற்ற நிறுவனம் என்ற பெருமைகள் பலவற்றை 'சுந்தரம் பாசனர்ஸ்' நிறுவனம் பெற்றது என்றால் அதற்கான காரணகர்த்தா திரு.சுரேஷ் கிருஷ்ணாதான்.
சிறந்த முறையில் உற்பத்தியைப் பெருக்கியதற்கான விருதினை ஜப்பானில் உள்ள ஏசியன் புரடக்டிவிட்டி ஆர்கனைசேஷன் அவருக்கு வழங்கியிருக்கிறது. ஆல் இந்தியா மேனேஜ்மென்ட் அசோசியேஷன் பெருமைமிகு ‘ஜே.ஆர்.டி. டாடா கார்ப்பரேட் லீடர்ஷிப் அவார்டு’ அவருக்குத் தந்து கெளரவப்படுத்தியுள்ளது. ஏர்னஸ்ட் அண்ட் எங் நிறுவனம் ‘ஆந்த்ரபிரினர் ஆஃப் த இயர்’ என்கிற விருதினைத் தந்து இவருக்குப் பெருமை சேர்த்தது. அவரின் பெருமைகளுக்குப் பெருமை சேர்க்கவும் திறமையை மதித்து அங்கீரிக்கவும் அவருக்கு 'லைப் டைம் அச்சிவ்மென்ட் அவார்ட்' அளிப்பதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்.