-
பிசினஸ் இன்னோவேஷன் அவார்ட்
திரு.ஆர்.தினேஷ்
நிர்வாக இயக்குநர்
டி.வி.எஸ். லாஜிஸ்ட்டிக்ஸ்
எந்தத் தொழிலையும் காலத்திற்கேற்ப மாற்றங்களுக்கு உட்படுத்துவது ஒன்றுதான் வளர்ச்சிக்கான பாதையாக இருக்க முடியும். இந்த பிசினஸ் இன்னோவேஷனுக்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது டி.வி.எஸ். லாஜிஸ்ட்டிக்ஸ் சர்வீசஸ் லிமிட்டெட் நிறுவனம். பொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்வதில் பெயர் பெற்றவர்கள் நம் தமிழர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே கடல் கடந்து சென்று வணிகம் செய்ததன்மூலம், இன்றைக்கு லாஜிஸ்ட்டிக்ஸ் என்று சொல்லப்படும் துறைக்கு அன்றைக்கே அடிப்படை அமைத்துத் தந்தார்கள்.
அப்படிப்பட்ட லாஜிஸ்ட்டிக்ஸ் துறையில் இன்றைக்கு உலக அளவில் மிகச் சிறந்த நிறுவனமாகத் திகழ்கிறது டி.வி.எஸ். லாஜிஸ்ட்டிக்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தை கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கினார் திரு.தினேஷ். தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றிய டி.வி.எஸ் குழுமத்தின் நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவர் ஆர்.தினேஷ், டி.வி.எஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் முதலில் பணியாற்றினார்.
1996-ல் வேர்ஹவுசிங் பிசினஸில் காலடி எடுத்து வைத்தார். 2004-ல் டி.வி.எஸ். லாஜிஸ்ட்டிக்ஸ் சர்வீசஸ் லிமிட்டெட் நிறுவனத்தைத் தொடங்கினார். சுமார் 14 ஆண்டுகளுக்குமுன் 12 கோடி ரூபாயை வருமானமாகக் கொண்டிருந்த இந்த நிறுவனம், தற்போது 7,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாயை இட்டி இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது. லாஜிஸ்ட்டிக்ஸ், வேர்ஹவுசிங், ட்ரான்ஸ்போர்ட்டேஷன், ஃப்ரைட் ஃபார்வேர்டிங், பேக்கேஜிங் டிசைன் அண்ட் சொல்யூஷன் என லாஜிஸ்ட்டிக்ஸ் துறை தொடர்பான அனைத்து வேலைகளையும் இணைத்து, சேவையைத் தருகிறது இந்த நிறுவனம்.
வாகனத் துறை, எலெக்ட்ரானிக்ஸ் பொருள் உற்பத்தித் துறை, என்ஜினியரிங் துறை, எஃப்.எம்.சி.ஜி, கெமிக்கல் எனப் பல்வேறு துறைகளுக்கு ‘எண்ட் டு எண்ட் சொல்யூஷன் தரும் மிக முக்கியமான நிறுவனமாக இருக்கிறது டி.வி.எஸ். லாஜிஸ்ட்டிக்ஸ். சென்னையைத் தலைமை இடமாகக்கொண்டு உலகின் முக்கியமான 50 நாடுகளில் இந்த நிறுவனம் லாஜிஸ்ட்டிக் சேவையை வெற்றிகரமாக அளித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, இத்தாலி என 12 நாடுகளில் நேரடியாக அலுவலகம் அமைத்து லாஜிஸ்ட்டிக் சேவையைத் தந்து வருகிறது. இந்தியாவில் 29 மாநிலங்களில் ஒரு கோடி சதுர அடி என்கிற அளவில் வேர் ஹவுசிங் வசதியை வைத்திருக்கும் இந்த நிறுவனம், உலக அளவில் ஒரு பில்லியன் டாலர் டேர்ன் ஓவர் என்கிற இலக்கினைத் தொட்ட நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு பில்லியன் டாலர் டேர்ன் ஓவரைத் தொட இலக்கு நிர்ணயித்துள்ளது.
புத்தாக்க முயற்சிகள்மூலம் லாஜிஸ்ட்டிக்ஸ் துறையில் புதிய உச்சத்தைத் தொட நினைக்கும் டி.வி.எஸ் லாஜிஸ்டிக்ஸ் சர்வீசஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.தினேஷ் அவர்களுக்கு பிசினஸ் இன்னோவேஷன் அவார்ட் வழங்கி, கெளரவிப்பதில் நாணயம் விகடன் பெருமை கொள்கிறது!