-
பிசினஸ் மென்ட்டார் அவார்ட்
டாக்டர் பரத் கிருஷ்ண சங்கர்
சேர்மன்
அபராஜிதா கார்ப்பரேட் சர்வீஸஸ் பிரைவேட் லிமிட்டெட்.
மதுரையில் பிறந்து அமெரிக்கன் கல்லூரியில் படித்து, சார்ட்டட் அக்கவுண்டன்ஸி படிப்பில் இந்திய அளவில் கோல்ட் மெடல் பெற்றவர் டாக்டர் பரத் கிருஷ்ண சங்கர். படிப்பை முடித்த பின் மதுரையில் நிதி மற்றும் கட்டமைப்பு சார்ந்த ஆலோசகராக தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார் பரத். டிவிஎஸ் மாதிரியான பல நிறுவனங்களும் பரத்தின் வாடிக்கையாளர்களாக இருந்தன.
1998-ல் மனிதவளம் தொடர்பான பயிற்சியைத் தரும் நிறுவனத்தைத் தொடங்கியவர், 2000-ம் ஆண்டில் தனது நண்பர் நாகராஜுடன் இணைந்து அபராஜிதா கார்ப்பரேட் சர்வீஸஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். நிறுவனங்களுக்கு மனிதவளம் சார்ந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தும் பணியைச் செய்யத்தொடங்கியது அபராஜிதா. இன்று அகில இந்திய அளவில் அது அந்தத் துறையில் தனித்துவமிக்கதொரு நிறுவனமாகத் திகழ்கிறது.
மதுரையில் இருந்து கே.பி.ஒ என்று சொல்லப்படுகிற நாலேஜ் புராசஸ் அவுட்சோர்ஸிங் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதற்கு அபராஜிதா நல்ல உதாரணம். தொழில் நிறுவனங்களுக்கு மனிதவளம் சார்ந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துகிற அதே சமயம், சில தொழில் நிறுவனங்களுக்குத் தொழில் சார்ந்த சில ஆலோசனைகளைத் தரவேண்டிய அவசியம் இருப்பதை உணர்ந்தார் டாக்டர் பரத்.
தொழில் நடத்தும்போது ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன, அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பது குறித்து மதுரையைச் சுற்றியிருக்கும் பல நூறு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்றார் பரத். இந்த ஆராய்ச்சியின்மூலம் தான் கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களுக்குக் கற்றுத் தரும் ‘மென்ட்டார்ஷிப்’ பணியை விருப்பத்துடன் செய்ய ஆரம்பித்தார். அரவிந்த் ஐ கேர் நிறுவனம் ஒரு புணர்வாழ்வு மையம் அமைப்பதற்காக ஆலோசனைகள் வழங்கினார். பிற்பாடு மதுரையிலிருந்து செயல்பட்டுவரும் ‘யெஸ்’ நிறுவனத்தின் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுப்பதில் ஆலோசனை வழங்கினார். ஏராளமான தொழில்முனைவோர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறார் டாக்டர் பரத்.
இந்தப் பயிற்சி வகுப்புக்கு ஜேர்னி இன் ஜாய் (Journey in Joy) என்று பெயரிட்டிருக்கிறார் பரத். ‘கற்றுக்கொள்வது ஆனந்தம்; தான் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்குக் கற்றுத் தருவது பேரானந்தம்’ என்கிற கொள்கையை முழுமூச்சாகக் கொண்டு செயல்படும் மதுரை மண்ணின் மைந்தன் டாக்டர் பரத் கிருஷ்ண சங்கருக்கு பிசினஸ் மென்ட்டார் அவார்ட் வழங்கி, கெளரவிப்பதில் நாணயம் விகடன் பெருமை கொள்கிறது!