-
பிசினஸ் ரைசிங் ஸ்டார் அவார்ட்
திரு.என்.சந்திரன்
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் குளோபல் குளோத்திங் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம்
திருப்பூருக்கு வந்தவர்களை எல்லாம் வாழவைக்கும் நகரம். கடுமையான உழைப்பாளிகள் பலரையும் குரோர்பதிகளாக உயர்த்திய நகரம். அப்படி உயர்ந்த பலரில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் குளோபல் குளோத்திங் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு.என்.சந்திரன்.
திருப்பூரில் பிறந்த திரு.என்.சந்திரனின் குடும்பப் பின்னணி மிகச் சாதாரணமானது. பள்ளிப்பருவத்திலேயே ஓட்டப்பந்தயம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரராக இருந்தார். கல்லூரிப் படிப்பை முடித்தபின் சிறிய அளவில் கையினால் இயங்கும் இயந்திரத்தின்மூலம் ஒரு நிறுவனத்தை நிறுவி, பனியன்களுக்குச் சாயம் இடும் தொழிலை ஆரம்பித்தார் திரு.என்.சந்திரன். தனக்கென்று ஒரு நல்ல பெயரை மிகச் சில ஆண்டுகளிலேயே பெற்ற அவர், 1983-ல் ஏற்றுமதி வர்த்தகத்தில் இறங்கினார்.
அந்தச் சமயத்தில், திருப்பூரில் ஒரு பெரும் வேலைநிறுத்தம் நடந்தது. அந்த வேலைநிறுத்தத்தையும் தாண்டி, ஆயத்த ஆடைகளைத் தயார் செய்து, ஏற்றுமதி செய்தார். ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்வதில் ஸ்பின்னிங் தொடங்கி, நிட்டிங், டையிங், எம்ப்ராய்டரி மற்றும் பேக்கேஜிங் என அனைத்து வேலைகளையும் ஒன்றிணைத்து, ஒரு முழுமையான நிறுவனமாக இன்று வளர்ந்து நிற்கிறது ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் குளோபல் குளோத்திங் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம்.
திண்டுக்கல்லில் 50 ஆயிரம் ஸ்பிண்டில்களுடன்கூடிய ஒரு ஸ்பின்னிங் ஆலை, ஈரோட்டில் ஒரு நாளில் 70 டன் ஆடைகளை டையிங் செய்யும்படியான ஒரு ரசாயன ஆலை, திருப்பூர் மற்றும் பெருந்துறையில் இரண்டு நிட்டிங் தொழிற்சாலைகள் என ஒரு மாதத்துக்கு ஒரு கோடிக்கும் அதிகமான ஆயத்த ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் குளோபல் குளோத்திங் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம். இன்றைக்கு இந்த நிறுவனம் உலகின் முக்கியமான பல பிராண்ட் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்து தருகிறது.
சில ஆயிரம் ரூபாயில் தொடங்கிய திரு.என்.சந்திரனின் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் குளோபல் குளோத்திங் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் இன்றைக்கு 2000 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானத்தை ஈட்டுகிறது. கடுமையான உழைப்பு, நேர்மையான அணுகுமுறை, தொழிலாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தரும் நல்லெண்ணம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டு, ஆயத்த ஆடைகள் உற்பத்தித் துறையில் அதிவேகமாக வளர்ந்துவரும் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் குளோபல் குளோத்திங் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.என்.சந்திரனுக்கு ரைசிங் ஸ்டார் விருது வழங்கி, கெளரவிப்பதில் நாணயம் விகடன் பெருமை கொள்கிறது!