-
ஸ்டார்ட் அப் சாம்பியன் அவார்ட்
கிரிஷ் மாத்ருபூதம்
ஃப்ரெஷ் ஒர்க்ஸ்
சினிமா நடிகர்கள் போல, கிரிக்கெட் வீரர்கள் போல, இன்றைய இளம் பிசினஸ்மேன்களால் கொண்டாடப்படுபவர் ஸ்டார்ட் அப் சாம்பியன் கிரிஷ் மாத்ரூபூதம். அவருடைய ஃப்ரஷ் ஒர்க்ஸ் நிறுவனம் ஸ்டார்ட்அப் கனவுகளோடு கிளம்புகிற இளைஞர்களுக்கான பக்காவான முன்மாதிரி. 1975-ம் ஆண்டில் திருச்சியில் பிறந்தார் ரத்னகிரிஷ் மாத்ருபூதம்.
1992-ல் தஞ்சாவூரில் கல்லூரியில் படித்து முடித்தவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தார். சில நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு, ஜோஹோ நிறுவனத்தில் சேர்ந்தார். சுருக்கமாக ‘சாஸ்’ என்று அழைக்கப்படுகிற ‘சாப்ட்வேர் அஸ் எ சர்வீஸ்’ என்பது பிரபலமாகி வந்தது. ‘சாஸ்’ தொழில்நுட்பத்தின் பலத்தையும், எதிர்காலத்தில் அது அதிவேகத்தில் வளர்ச்சி காண்பதற்கு வாய்ப்பு இருப்பதையும் நன்கு உணர்ந்த கிரிஷ், அதை நிஜத்தில் செயல்படுத்துவதற்காக தனது இரு கல்லூரி நண்பர்களுடன் இணைந்து, 2010-ம் ஆண்டில் ஃப்ரஷ் டெஸ்க் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்.
அன்றைக்கு வளரத் தொடங்கிய இந்த நிறுவனம், இன்றைக்கு இந்தியாவின் அதிவேகத்தில் வளரும் ஸ்டார்ட் அப் நிறுவனமாக உயர்ந்திருக்கிறது. 2011 டிசம்பரில் ஏசெல் நிறுவனம் ஃப்ரஷ் டெஸ்க் நிறுவனத்தில் ஒரு மில்லியன் டாலரை முதல்முதலாக முதலீடு செய்தது. 2012 ஏப்ரலில் டைகர் குளோபல் மற்றும் ஏசெல் நிறுவனங்களிடமிருந்து ஐந்து மில்லியன் டாலர் முதலீடு பெற்றது. மீண்டும் 2013 நவம்பரில் ஏழு மில்லியன் டாலரை முதலீடு செய்தன. இதன்பிறகு கூகுள் கேப்பிட்டல் நிறுவனம் 31 மில்லியன் டாலர், 2015-ல் டைகர் குளோபல் மற்றும் ஏசெல் நிறுவனங்களிடமிருந்து 50 மில்லியன் டாலர், 2016 நவம்பரில் சேகோயா கேப்பிட்டல் இந்தியா நிறுவனத்திடமிருந்து 55 மில்லியன் டாலர் முதலீடு என வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டைப் பெறுவதில் தன்னிகரற்று விளங்குகிறது ஃப்ரெஷ் டெஸ்க். 2017-ல் ஃப்ரெஷ் ஒர்க்ஸ் என்று பெயர் மாற்றம் கண்டது இந்த நிறுவனம். இந்த ஆண்டு ஜூலையில் இந்த நிறுவனம் 100 மில்லியன் டாலரை முதலீடாகப் பெற்றிருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 100 மில்லியன் டாலர்.
நிறுவனம் தொடங்கிய எட்டு ஆண்டுகளிலேயே உலகம் முழுக்க 1.50 லட்சம்மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் சொல்ல வேண்டும் என்றால், சுமார் 10,500 கோடி ரூபாய்க்கு மேல். ஸ்டார்ட் அப் உலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் 43 வயதாகும் இளைஞர் கிரிஷ் மாத்ருபூதத்துக்கு ஸ்டார்ட் அப் சாம்பியன் அவார்ட் வழங்கி, கெளரவிப்பதில் நாணயம் விகடன் பெருமை கொள்கிறது!