-
பிசினஸ் இன்னொவேஷன் அவார்ட்
கே.ஆர்.நாகராஜன்
ஃபவுண்டர் அண்ட் மேனேஜிங் டைரக்டர்
ராம்ராஜ் காட்டன்
தமிழர்களின் தனித்துவமான அடையாளம் வேட்டி. இன்று திரையுலக நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், பிரபலமானவர்கள் ஏன்... பாரதப் பிரதமர் வரை விழாக்களில் வேட்டி அணிவதை பெருமையாக, பெருமிதமாகக் கருதுகிறார்கள். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்நாட்டிலேயே வேட்டிக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கவில்லை. அந்த நிலையை மாற்ற நினைத்தார் ஒரு தனி மனிதர். வேட்டியை இளைஞர்களும் விரும்பும் வகையில் காலத்துக்கேற்ற மாற்றங்களோடு விற்பனைக்குக் கொண்டுவந்தார். அவர், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் நிறுவனருமான கே.ஆர்.நாகராஜன். திருப்பூருக்குப் பக்கத்திலிருக்கும் அவிநாசிதான் நாகராஜனின் சொந்த ஊர்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். வறுமை காரணமாக, அவரால் பத்தாம் வகுப்புக்குமேல் கல்வி கற்க முடியவில்லை. வேட்டி தயாரிக்கும் ஒருவரிடம் வெறும் 150 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தார். நெசவாளர்கள் படும் துன்பத்தை நேரில் கண்டார். `அவர்களின் மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் தர என்ன செய்யலாம்?’ என்று யோசித்தார். ரூ.25,000 முதலீட்டில் தானே வேட்டிகளைத் தயாரித்து விற்க முடிவெடுத்தார். மற்றவர்களைப் போல இல்லாமல், தரமான வேட்டியைக் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, அதை தென் இந்தியாவின் அனைத்துக் கடைகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்தார். அவருடைய உழைப்புக்கு அற்புதமான பலன் கிடைத்தது. ஏதோ ஒரு வேட்டியை வாங்கிக் கொண்டுபோனவர்கள் `ராம்ராஜ் வேட்டி வேண்டும்’ என்று கேட்டு வாங்க ஆரம்பித்தார்கள். ஆனாலும் வேட்டி குறித்த சமூகத்தின் பார்வை மோசமாக இருந்தது. அதைக் கட்டிக்கொண்டு போனாதாலேயே சென்னையிலிருக்கும் ஒரு பிரபல ஹோட்டல் நாகராஜனை உள்ளே அனுமதிக்க மறுத்தது.
வேட்டியை பெருமையோடு அணியும் உடையாக மாற்றுவதன்மூலம் மக்களிடம் பாசிட்டிவ்வான பார்வையை உருவாக்க நினைத்தார். `ராம்ராஜ்’ நிறுவன விளம்பரங்கள்மூலம் அதை வெற்றிகரமாக செய்துமுடித்தார். வெறும் 25,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கிய அவரது பிசினஸ், இன்றைக்குப் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. வேட்டி மட்டுமல்ல... மினிஸ்டர் வொயிட் சட்டைகள், பெண்களுக்கான உள்ளாடைகள், குழந்தைகளுக்கான உடைகள் என ஆடைத் தயாரிப்பில் தனி முத்திரை பதித்துக்கொண்டிருக்கிறது ராம்ராஜ் காட்டன். தன் நவீனச் சிந்தனைகளால் வேட்டியை எல்லோருக்குமான உடையாக மாற்றிக்காட்டிய ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் கே.ஆர்.நாகராஜனுக்கு `பிசினஸ் இன்னோவேஷன் விருது வழங்கி கெளரவிப்பதில் பெருமைகொள்கிறது நாணயம் விகடன்.