-
பிசினஸ் மென்ட்டார் அவார்ட்
அருண் ஜெயின்
சேர்மன் & மேனேஜிங் டைரக்டர்
இன்டெலக்ட் டிசைன் எரினா.
ஒரு தொழிலை சரியாக நடத்தத் தெரியாமல் தவிப்பவர்கள் பலர். அப்படிப்பட்டவர்களுக்கு தொழில் தொடர்பான நெளிவுசுளிவுகளை சொல்லிக் கொடுத்து, நஷ்டம் அடைவதிலிருந்து காப்பாற்றி, ஜெயிக்க வைத்திருக்கிறார் இன்டெலக்ட் டிசைன் எரினா நிறுவனத்தின் சேர்மனும் மேனேஜிங் டைரக்டருமான அருண் ஜெயின். ஒரு சாதாரண அரசு ஊழியரின் மகனாகப் பிறந்தவர் அருண் ஜெயின். டெல்லி காலேஜ் ஆஃப் என்ஜினியரிங்-ல் எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படித்தார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இன்டர்நேஷனல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். பெரிய ஐ.டி நிறுவனங்கள் தந்த போட்டியைத் தாண்டி, சிட்டி பேங்க்கிடமிருந்து முதல் ஆர்டரைப் பெற்றது அருண் ஜெயினின் அபாரத் திறமை. அதிவேகமாக வளரத் தொடங்கிய அந்த நிறுவனம், பிற்பாடு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொலாரீஸ் கன்சல்டிங் அண்ட் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனமாக மாறியது.
பொலாரீஸ் நிறுவனத்திலிருந்து பிரிக்கப்பட்டு உருவான இன்டெலக்ட் டிசைன் எரினா நிறுவனத்தின் மதிப்பும் இன்று பல ஆயிரம் கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. பிசினஸ் செய்வதில் இருக்கும் நுட்பங்களையும் நெளிவுசுளிவுகளையும் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்ட அருண் ஜெயின், அதை மற்றவர்களுக்கு மனமுவந்து கற்றுத் தருவதில் அலாதி பிரியம் காட்டுபவர். கன்ஃபெடரேஷன் ஆஃப் இன்டியன் இன்டஸ்ட்ரி, மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன், நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய அமைப்புகளில் அங்கம் வகித்தபோது, தான் கற்றுக்கொண்ட தொழில் ரகசியங்களை குறையில்லாமல் எல்லோருக்கும் கற்றுத் தந்தார்.
சென்னையில் `த சென்டர் ஆஃப் எக்ஸெலன்ஸ் ஃபார் ஃபின்டெக்’ என்கிற அரசு அமைப்பின் சீஃப் மென்ட்டராக இருந்து, அதனை சிறப்பாக உருவாகக் காரணமாக இருந்தவர் அருண் ஜெயின்தான். `உல்லாஸ்’ என்கிற அறக்கட்டளைமூலம் பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் இருக்கும் 2,50,000-த்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் கனவினை நிஜமாக்கும் உதவிகளைச் செய்துவருகிறார். `ஸ்டார்ட் அப் நுக்கட்’ என்கிற அமைப்பின்மூலம் இளம் ஸ்டார்ட் அப் தொழில்முனைவோர்களுக்குத் தேவையான தொழில் ஆலோசனைகளைத் தந்துவருகிறார். `மிஷன் சம்ருதி’ மூலம் `டிசைன் திங்கிங்கினை’ப் பயன்படுத்தி, கிராம பஞ்சாயத்துகளின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகிறார். தான் மட்டும் முன்னேற்றம் கண்டால் போதாது, தம்மோடு இருக்கும் அனைவருமே முன்னேற வேண்டும் என்கிற லட்சியத்துடன் செயல்படும் இன்டெலக்ட் டிசைன் எரினாவின் சேர்மன் & மேனேஜிங் டைரக்டருக்கு பிசினஸ் மென்ட்டார் அவார்ட் வழங்குவதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்.