-
பீனிக்ஸ் ஆன்ட்ரபிரனர் அவார்ட்
சி.கே.குமரவேல் மற்றும் வீணா குமரவேல்
கோ ஃபவுண்டர் அண்ட் ஃபவுண்டர்
குரூம் இந்தியா சலூன் & ஸ்பா பிரைவேட் லிமிடெட்
வெற்றியும் தோல்வியும், `வியாபாரம்’ என்ற ஆட்டத்தில் கிடைக்கும் இரு வேறு பலன்கள். இந்த ஆட்டத்தில் இழப்புகளும் வீழ்ச்சிகளும் தவிர்க்க முடியாதவை. வெற்றிக்கொடி நாட்டி, உச்சாணிக்கொம்பில் ஏறியிருந்த எத்தனையோ சாம்ராஜ்யங்கள் ஒரே இரவில் தரைதட்டிய சரித்திரங்கள் ஏராளம். அப்படித் தோல்விகளோடு போராடி, ஃபீனிக்ஸ் பறவையாக எழுந்து, உயரப் பறந்து தங்கள் துறையில் உச்சம் தொட்டிருக்கிறார்கள் `நேச்சுரல்ஸ் பியூட்டி சலூன்’ நிறுவனத்தின் நிறுவனர் சி.கே.குமரவேலும், இணை நிறுவனரான வீணா குமரவேலும். சாஷே தொழில்நுட்பத்தின் மூலம் உலக வர்த்தகத்தின் போக்கையே மாற்றிக் காட்டிய சாதனையாளர் சின்னி கிருஷ்ணனின் நான்காவது மகன் சி.கே.குமரவேல். 1993-ம் ஆண்டில் `நேச்சர்கேர்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி, வியாபார உலகில் அடியெடுத்துவைத்தார். `ராகா ஹெர்பல் பவுடர்’ என்ற புகழ்பெற்ற பிராண்டை உருவாக்கினார். ஆரம்பத்தில் லாபம் ஈட்டிக்கொண்டிருந்த நிறுவனம், வெவ்வேறு காரணங்களால் மார்க்கெட்டில் பெரிய வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கியது.
‘அவ்வளவுதான்... இனி அவர் திரும்பவே மாட்டார்’ என்று முடிவுகட்டியது வியாபார உலகம். ஆனால், குமரவேல் திரும்பிவந்தார். ‘இந்தமுறை தோற்றுவிடக்கூடாது. ஒவ்வோர் அடியையும் திட்டமிட்டு, நிதானமாக, சரியாக எடுத்துவைக்க வேண்டும்’ என்று குமரவேலுவும் வீணா குமரவேலும் பக்காவாகத் திட்டமிட்டார்கள். சலூன்கள் அவர்களின் கண்ணில்பட்டன. அன்று தொடங்கியது `நேச்சுரல்ஸ்'ஸின் வரலாறு!
இந்த நூற்றாண்டு பிறந்தபோது, `நேச்சுரல்ஸ் ஹேர் அண்ட் பியூட்டி சலூனு’ம் பிறந்தது. எதிர்பார்த்தபடியே மிடில் கிளாஸ் மக்கள் நேச்சுரல்ஸுக்கு அமோக ஆதரவை வழங்கினார்கள். ஒரேயொரு சலூனோடு தொடங்கப்பட்ட நேச்சுரல்ஸுக்கு இன்று இந்தியா முழுக்க, 80 நகரங்களில் 640 கிளைகள் இருக்கின்றன. நேச்சுரல்ஸ் 300-க்கும் மேற்பட்ட பெண் தொழிலதிபர்களை உருவாக்கியிருக்கிறது. 10,000-க்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. `வரும் ஆண்டுகளில் 1,000 சலூன்கள்’ என்ற லட்சியத்தோடு வெற்றிநடை போடும் சி.கே.குமரவேல் - வீணா குமரவேல் தம்பதியருக்கு ஃபீனிக்ஸ் விருது வழங்கி கெளரவிப்பதில் பெருமைகொள்கிறது நாணயம் விகடன்..