-
ரைஸிங் ஸ்டார் அவார்ட்
சதிஷ்குமார்
மில்க்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் பிரைவேட் லிமிடெட்
ஈரோடு மாவட்டம், தயிர்ப்பாளையம்தான் சதிஷ்குமாருக்குச் சொந்த ஊர். அப்பா சின்னதாக ஒரு பால் பண்ணை நடத்திக்கொண்டிருந்தார். பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே சதிஷுக்குப் படிப்பையும் தாண்டி வியாபாரத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. படிப்பை கைவிட்டார்; பால் வியாபாரத்தில் இறங்கிவிட்டார். அப்பாவின் பால் வியாபாரத்தில் பெரிய லாபமில்லை. அதற்கான காரணத்தை அறிந்துகொள்ள பாலை வாங்கி மறு விற்பனை செய்யும் ஒரு வியாபாரியைச் சந்தித்தார். அவர் மூலமாக பால், பனீராக மாறும்போது அதிக லாபம் சம்பாதிக்கும் மாயாஜாலத்தைத் தெரிந்துகொண்டார். பிறகென்ன... சதிஷும் பனீர் தயாரிப்பில் ஈடுபட முடிவெடுத்தார். தன் தந்தைக்கே தெரியாமல் முதன்முறையாக 300 லிட்டர் பாலில் பனீர் தயாரித்துப் பார்த்தார்.
அந்தச் சின்னஞ்சிறு வயதில், தான் தயாரித்த பனீரை பெங்களூருவிலிருக்கும் ஹோட்டல்களில் அவரே கொண்டுபோய் விற்றார். ஹோட்டல்காரர்கள் பனீர் உற்பத்தியை மேம்படுத்துவது எப்படி என்று ஆலோசனை வழங்கினார்கள். சதிஷ்குமாரின் பனீர் சந்தை பரவ ஆரம்பித்தது. ஹோட்டல்களிலிருந்து ஆர்டர்கள் குவிந்தன. வெளியிலிருந்து பாலைக் கொள்முதல் செய்து பனீர் தயாரிக்க ஆரம்பித்தார் சதீஷ். சில்லறை விற்பனையிலும் கால்பதித்தார். உதயமானது... `மில்க்கி மிஸ்ட்.’ வங்கியில் கடன் வாங்கி உற்பத்தியை அதிகப்படுத்தினார். விற்பனையை அதிகரிக்க விளம்பரங்கள் செய்வது, சிறிய கடைகளுக்கு ஃப்ரிட்ஜ் கொடுப்பது என ரீடெயில் சந்தையில் அதிரடியாகப் புதுமைகளைச் செய்தார். ஒருகட்டத்தில், `வெறும் பனீரை மட்டும் விற்றால் தொழிலில் தாக்குபிடிக்க முடியாது’ என்பதை உணர்ந்துகொண்டு, தயிர், பட்டர் எனப் பல்வேறு பால் பொருள்களைத் தயாரித்து விற்கத் தொடங்கினார். சிறிய அளவில் தொடங்கிய `மில்க்கி மிஸ்ட்’டின் வெற்றிப்பயணம் பயணம் இன்று தமிழகத்தையும் தாண்டிப் பரவியிருக்கிறது.
35,000 -க்கும் அதிகமான கறவையாளர்களிடமிருந்து பாலைப் பெற்று, 110-க்கும் அதிகமான பால் பொருள்களைத் தயாரித்து விற்கிறது மில்கி மிஸ்ட். பத்தாண்டுகளுக்கு முன்னர் வெறும் 14 கோடியாக இருந்த மில்க்கி மிஸ்ட்டின் வர்த்தகம், இன்று 500 கோடியைத் தாண்டி வளர்ந்துகொண்டேயிருக்கிறது. பள்ளிக் கல்வி மட்டுமே படித்த சதிஷ்குமார், இன்று நூற்றுக்கணக்கான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தரும் தொழிலதிபராக உயர்ந்திருக்கிறார். தன் அயராத உழைப்பாலும், வித்தியாசமான சிந்தனையாலும், புதுமையான அணுகுமுறையாலும் தொழிலில் வெற்றிக்கு மேல் வெற்றி குவித்துவரும் சதிஷ்குமாருக்கு ‘ரைஸிங் ஸ்டார்’ விருது வழங்கி கௌரவிப்பதில் பெருமைகொள்கிறது நாணயம் விகடன்.